போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக 45 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்களது குடும்ப சொத்து என கூறி சிவகிரி ஜமீனின் வாரிசுதாரரான ராணி பாலகுமாரி நாச்சியார் உள்ளிட்டோர் இணைந்து போலியான ஆவணங்களை தயார் செய்து, கடந்த 2006-ம் ஆண்டு சுலைமான் கான் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளனர். பின்னர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நஜீர் என்பவர் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
இதை எதிர்த்தும், நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி கேசவன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே, சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை இழப்பீடாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத் துக்கு வழங்க வேண்டும். அபராத தொகையை கட்டத் தவறினால் 2 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.