புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு சோதனையிட வந்த வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர். படம்: எம்.சாம்ராஜ் 
க்ரைம்

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கும் போலீஸார் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துணைநிலை ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின், இந்தமிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மின்னஞ்சலில் கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டல், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சாதனங்களுடன் விரைந்து சென்று அந்த ஹோட்டல்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. வாகனங்களை நிறுத்துமிடங்களிலும் சோதனயிட்டனர்.

இதற்கு நடுவில் முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர். முதல்வரின் வீட்டின் அனைத்துப் பகுதிகள், கார் நிறுத்துமிடங்கள், வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும், முதல்வர் வழிபாடு நடத்தும், அவரது வீட்டின் அருகில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து, அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த இரு மாதங்களில் துணைநிலை ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல்வர் வீடு என அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது காவல்துறை அதிகாரிகள், உயர் நிர்வாக அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தீயணைப்பு நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக முத்தரையர்பாளையம் கோவிந்தம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற சம்பவங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT