சென்னை: இணையதள செயலி வாயிலாக, பணிக்கு வந்த இடத்தில் 30 பவுன் தங்க நகையை திருடியதாக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கரி (44). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். கடந்த 7ம் தேதி அவர், தனது வீட்டை சுத்தம் செய்ய இணையதள செயலி மூலம் பதிவு செய்தார். இதையடுத்து, அன்றைய தினம் மதியம் 2 பேர் வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்றனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு வீட்டு பீரோவிலிருந்த நகைகளை சோதனை செய்தபோது 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், வீட்டை சுத்தம் செய்ய வந்த திரிபுரா மாநிலம், மேற்கு திரிபுராவைச் சேர்ந்த பிடன் மியா (32), மற்றும் லிடன் மியா (28) ஆகிய இருவரும் நகை திருட்டில் ஈடுபட்டதோடு அந்த நகைகளுடன் அவர்களது மாநிலத்துக்கு தப்பிச் சென்று, அங்கு நகைகளை விற்பனை செய்து பங்கிட்டு கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அம்மாநிலம் விரைந்த திருவான்மியூர் போலீஸார் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.