ராமநாதபுரம்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தைக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்படம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் கடந்த 2021 ஜூலை முதல் 2022 ஜூலை வரை தேவாலயத்துக்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கூறப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்டக் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் விசாரணை செய்து, மண்டபம் காவல் நிலையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, 8.8.2022 அன்று பங்குத்தந்தை மீது மண்டபம் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று முன்தினம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கவிதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்குத்தந்தை ஜான் ராபர்ட்டுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.