க்ரைம்

விருகம்பாக்கம் எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு கேன்டீனை இடித்ததாக புகார்: போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: விருகம்பாக்கம் எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு கேன்டீன் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் பால்துரை (73). இவர், வேளச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான, வடபழனி குமரன் காலனி 4 வது தெருவில் 1,800 சதுர அடி நிலத்தை 2003-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். இவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘குமரன் காலனி 4-வது தெருவில் உள்ள இடத்தை 2003-ம் ஆண்டு முதல் ஜனார்த்தனன் என்பவரிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, கேன்டீன் நடத்தி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் ஆட்கள் என கூறி சூரிய சிவகுமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் குத்தகைக்கு இருக்கும் இடம் அவர்களுக்கு சொந்தமானது எனவும், இந்த இடத்தை காலி செய்யும்படி கூறி மிரட்டல் விடுத்து வந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும், முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொலை மிரட்​டல்: இந்நிலையில், பிரபாகர் ராஜாவின் ஆட்கள் என கூறி வந்த சூரிய சிவகுமார், சீனிவாசன் மற்றும் 30 பேர் திடீரென ஜேசிபி இயந்திரம் கொண்டு எங்கள் இடத்தின் சுற்றுச் சுவரை இடித்து பொருட்களை நொறுக்கினர். இதுகுறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தரப்பிலிருந்து, இந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எங்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனியாக மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT