மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மஞ்சூர் அருகேயுள்ள மேல் கொட்டரகண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனியாக வசித்து வந்தார். மேலும், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கொட்டரகண்டியில் உள்ள வாடகை வீட்டில் ராஜ்குமார் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் ராஜ்குமார் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவர் இறந்து சில நாட்களாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, ஊட்டி டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது "ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் உள்ளது. அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும். இது இயற்கை மரணமா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.