க்ரைம்

திருவள்ளூர் திமுக பெண் கவுன்சிலரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியின் திமுக பெண் கவுன்சிலரை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் - பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (44). திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரான இவர், திருவள்ளூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (30), தனலட்சுமியை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சி ஒன்றில், வடிவேல் ‘ஏம்மா இந்த ஆளுக்கு நீ ஐந்தாவதா... ஆமா... அப்ப இந்த ஆளு உனக்கு எத்தனையாவது’ என கேட்கும் கேள்விக்கு நடிகை ‘ஏழாவது’ என்று சொல்லும் ஆடியோவை இணைத்து, பெண் கவுன்சிலர் புகைப்படம் உள்ளிட்டவையுடன் வெளியிடப்பட்டுள்ளார். இந்த வீடியோ, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்போர் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பொன்ராஜிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பொன்ராஜ், ‘அப்படித்தான் செய்வேன். இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன். ஒரு லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் தொடர்ந்து, சமூக வலை தளங்களில் அவதூறு பரப்புவேன்’ எனக் கூறியதோடு, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், பொன்ராஜை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT