ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய 2 கிலோ கோகைன் போதைப் பொருள் மற்றும் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள். 
க்ரைம்

ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய 2 கிலோ கோகைன் பறிமுதல்: 8 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய 2 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பல கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை கை மாற்ற உள்ளதாக அமலாக்கம் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை பரங்கிமலையில் 5 பேர் கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்த கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழக்கரையைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த வனக்காப்பாளர் என கூறப்படுகிறது. இவர், இவரது உறவினரான பாண்டி என்பவரிடம் இருந்து ஒரு கிலோ கோகைன் பெற்றுள்ளார். கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்குகளை சேகரித்தபோது கோகைன் போதைப் பொருளை கண்டறிந்ததாகவும், அதை தனது உறவினரான வனக்காப்பாளரிடம் பாண்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி கிடைத்ததாக கூறப்படும் கோகைனை சென்னையில் பெருந்தொகைக்கு விற்பனை செய்ய ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்டபோது போலீஸாரிடம் போதைப் பொருள் மட்டும் அல்லாமல் அதில் தொடர்புடையவர்களும் பிடிபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே பிடிபட்ட போதைப் பொருட்கள் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதா? அல்லது இதன் பின்னணியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் உள்ளதா? என அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையின் நுண்ணறிவு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT