க்ரைம்

ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்: கோவையில் 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பணம், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டை மையப்படுத்தி, ஒரு கும்பல் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், காவல் ஆணையரின் தனிப்படை போலீஸார், நேற்று ராம்நகர் பகுதியில் தகவல் கிடைத்த வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 7 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையப்படு்த்தி, ஆன்லைன் வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் சொக்கம்புதூரைச் சேர்ந்த நந்தகுமார் (32), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35), ஜிதேந்திரசிங் (41), காட்டூரைச் சேர்ந்த சவுந்தர் (29), அருண் (37), விபுல் (36) ஆகியோர் எனத் தெரிந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸார் கூறும்போது, “மேற்கண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் லோட்டஸ், ஜே.டி உள்ளிட்ட சில இணையதள முகவரியை மையப்படுத்தி ஆன்லைன் சூதாட்ட தளத்தை இயக்கி வந்துள்ளனர்.

முதலில் தங்களுக்கு தெரிந்த நபர்கள், வாட்ஸ் அப்பில் அறிமுகம் ஆன நபர்களை இதில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். இதில் உறுப்பினராக கட்டணம் செலுத்த வேண்டும். அந்தக் கட்டணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஐடி, ரகசிய குறியீடு எண் அளித்துள்ளனர். அதைப் பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்துக்குள் சென்று, கட்டணம் செலுத்தி புள்ளிகளைப் பெற வேண்டும்.

பின்னர், தங்களுக்கு பிடித்த அணியை தேர்வு செய்து, டாஸ் போடுவது, பவுண்டரி அடிப்பது, விக்கெட் எடுப்பது, ரன்கள் அடிப்பது என அனைத்திலும் பெட் கட்டி விளையாடியுள்ளனர். இதில் வெற்றி பெறுவர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகையை கொடுத்து விடுவர். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மோசடியில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி பணம், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.” என்றனர்.

SCROLL FOR NEXT