ஆனந்தன் 
க்ரைம்

பாண்டிபஜாரில் பிரபல நகைக்கடையில் போலி கை செயினை வைத்துவிட்டு தங்க செயினை திருடிய ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பாண்டிபஜாரில் உள்ள பிரபலமான நகைக்கடையில் போலியான கைசெயினை வைத்துவிட்டு, தங்க செயினை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபலமான நகைக்கடை உள்ளது. கடையில் விற்பனை முடிந்த பின்னர், தினமும் நகைகள் கணக்கிடப்படும். அதன்படி, கணக்கிட்டு பரிசோதித்ததில் ஒரு கை செயின் மட்டும் கடையின் அடையாள குறியீடு இல்லாமல் இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனை பிரிவு மேலாளர் குருபாலன், இதுதொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பி.காம். பட்டதாரி: அப்போது, ஒரு மாதத்துக்கு முன்னர் பணியில் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம், ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவர், கடந்த 5-ம் தேதி கை செயின் பிரிவுக்கு சென்று, போலி செயினை வைத்து விட்டு, 3 பவுன் எடையுள்ள தங்க கை செயினை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பி.காம் பட்டதாரியான ஆனந்தன், வேலைக்கு சேர்ந்து பயிற்சியில் இருந்தபோது கைவரிசை காட்டி உள்ளார். அவரை போலீஸார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT