மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அம்புரோஸ் மற்றும் லாரன்ஸ்  
க்ரைம்

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு ரவுடிகள் கைது - கால்கள் முறிந்தால் சிகிச்சை

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், இருவரது கால்களும் முறிந்தன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று (ஏப்.8) இரவில், பணிமுடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கவுதம் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பினர். இதுகுறித்து கவுதம் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், செல்போனை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும் ரத்தினபுரியில் உள்ள மேம்பால தடுப்புச்சுவர் மீது அவர்களது வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த 2 பேரின் கால்களும் முறிந்தன. உடனே அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் இன்று (ஏப்.9) விசாரித்தனர். அதில், கீழே விழுந்து காயம் அடைந்தவர்கள் கவுதமிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு சென்றவர்கள் என்பதும், ரத்தினபுரி போலீஸாரால் தேடப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகிம் பாதுஷா மற்றும் போலீஸார், 2 பேரும் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்கள் ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த அம்புரோஸ் (28), ரத்தினபுரி சுப்பையா லே-அவுட் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (27) என்பது தெரியவந்தது. அத்துடன் 2 பேர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைதான அம்புரோஸ் மீது 9 வழக்குகளும், லாரன்ஸ் மீது 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இந்த ரவுடிகள் 2 பேரும் கடந்த வாரம்தான் வெளியே வந்து உள்ளனர். வெளியே வந்த உடனே தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT