சென்னை: வியாசர்பாடி - பேசின்பாலம் இடையே மெதுவாக வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலில், பயணியிடம் செல்போன் பறித்த இளைஞரை பெரம்பூர் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கமலஹாசன்(33). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வார இறுதியில் ஊருக்கு சென்று திரும்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2-ம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு, காட்பாடியில் இருந்து மங்களூர் விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டார்.
இவர், ரயிலில் பொதுபெட்டியில் படிக்கட்டு அருகே அமர்ந்திருந்தார். இந்த ரயில் வியாசர்பாடி - பேசின்பாலம் நிலையங்களுக்கு இடையே மெதுவாக வந்தபோது, தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த ஒருநபர், ஒரு குச்சியால் கமலஹாசன் கையில் வைத்திருந்த செல்போனை தட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கமலஹாசன், செல்போனை கீழே விழாமல் பிடிக்க முயன்றபோது, நிலைத்தடுமாறி விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அவரை பெரம்பூர் ரயில்வே போலீஸார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். வியாசர்பாடி - பேசின்பாலம் இடையே தண்டவாள பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள், பயணி கொடுத்த அடையாளங்கள், பழைய வழக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞரை வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அந்தநபர், வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தலம் கொல்லாபுரி நகரைச் சேர்ந்த பரத்குமார் (19) என்பதும், கமலஹாசனின் செல்போனை பறித்தும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் பரத்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.