சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் பயணிகளின் செல்போன்கள் திருடிய வழக்கில், இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாத் சிங் மகன் சிவம் சிங்(18). இவர் சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறையில் கடந்த 6-ம் தேதி அமர்ந்திருந்தார்.
அங்கு இவர் தனது செல்போனை சார்ஜிங் முனையில் சார்ஜ் செய்ய வைத்துவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து, சார்ஜிங் முனையில் செல்போனை எடுக்க சென்றபோது, அங்கு செல்போன் மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.
இதுபோல, கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் தனது செல்போன் திருடு போனது தொடர்பாக புகார் கொடுத்திருந்தார். இந்த புகார்களின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதலில், ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் செல்போனை சார்ஜ் போடுவதுபோல வந்து, மற்றொருவர் செல்போனை எடுத்துச் சென்றார். இதையடுத்து, அவரது அடையாளங்களை வைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், அந்த நபர், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்தபோது, ரயில்வே போலீஸார் மடக்கி பிடித்தனர். அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த நபர், திருவள்ளூர் ஒதிகாடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(32) என்பதும், சிவம் சிங்கின் செல்போனை திருடிய நபர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல, கார்த்திக் என்ற பயணியிடம் செல்போன் திருடியது தொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் (39) என்பரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.