திருவண்ணாமலை: டிஜிட்டல் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் லோகேஸ்வரன்(15). திருநகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தனுஷ்குமார்(17). நண்பர்களான இருவரும் சில இளைஞர்களுடன் இணைந்து, மணலூர்பேட்டை சாலையில் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் டிஜிட்டல் பேனரை நேற்று முன்தினம் நள்ளிரவு வைக்க முயன்றுள்ளனர்.
அப்போது, பேனரில் உள்ள இரும்புக் கம்பி அருகேயுள்ள மின்மாற்றியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து லோகேஸ்வரன், தனுஷ்குமார் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை நகர போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனுஷ்குமார் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக தனுஷ்குமார் காத்திருந்துள்ளார். லோகேஸ்வரன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.