வீட்டில் நுழைந்து பெண்ணை புகைப்படம் எடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூரில் குடும்பத்துடன் வசித்து வரும் 34 வயது பெண் ஒருவர் கடந்த 2-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டு அந்த பெண் எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணின் அருகில் நின்று, அவர் தூங்குவதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வருவதை கண்ட அந்த நபர், பெண்ணின் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீஸார் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (37) என்பவரை கைது செய்தனர்.