க்ரைம்

இறுதிக் கட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 9 பேரிடம் நீதிபதி கேள்வி

ஆர்.ஆதித்தன்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி கேள்விகளை கேட்டார்.

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2019-ம் ஆண்டு காவல் துறையில் புகாரளித்தார். புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்தது. சாட்சி விசாரணை குறித்து கேள்வி கேட்க 9 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313-ன் கீழ் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து 9 பேரிடம் கேள்விகளை கேட்டார். அப்போது ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகளை கேள்விகளாக கேட்டு உண்மையா, பொய்யா என கேட்டார். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கேள்வி மாலை 3.45 மணிக்கு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பின்னர் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உதவி ஆணையர் கணேசன், ரேஸ்கோர்ஸ் ஆய்வாளர் அர்ஜுன்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT