சென்னை: மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியில் வசித்தவர் சங்கர் (44). பெயின்டிங் மற்றும் எலெக்ரீஷியன் வேலை செய்து வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு தலையில் பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சங்கரின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த தருண் (23) என்பவரை கைது செய்தனர். சம்பவத்தன்று சங்கர் அவரது வீட்டினருகே நின்றிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த தருண், சிகரெட் வாங்கி வரச் சொல்லியுள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த சங்கர், தருணை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். தருண் கோபமடைந்து சங்கரை பிடித்து தள்ளியுள்ளார். இதில், சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.