க்ரைம்

சென்னை | ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பு வீட்டுடன் கூடிய நிலம் மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை அபகரித்த புகாரில் தலைமறைவாக இருந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவைச் சேர்ந்தவர் தாராசந்த். விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ``தேனாம்பேட்டையில் எனது தாயார் பெயரில் ரூ.5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது.

அதை எனது தாயார் போல் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்களை தயார் செய்தும் சிலர் மோசடி செய்து அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது வீட்டை மீட்டுத் தர வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை அபகரித்தது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59), சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர் (60) என்பது தெரியவந்தது.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஏப்.26-ம் தேதி கலைச்செல்வி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT