சென்னை: முதியவர் மீது 'ராட்வீலர்' வகை நாயை கடிக்க ஏவிய வழக்கறிஞர் மீது புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை புழலை அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மாரியப்பன்(74).
கொத்தனாரான இவர், கடந்த 31-ம் தேதி நள்ளிரவு வீட்டருகே குறுகிய சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் 'ராட்வீலர்' வகை நாயை நடைபயிற்சிக்காக அழைத்து வந்தார். இதைப் பார்த்த மாரியப்பன், 'இந்த பகுதியானது குறுகிய பகுதி.
இங்கு பெரிய அளவிலான நாயை அழைத்து வந்ததோடு, அது பிறரை கடிக்காமல் இருக்க நாயின் வாயை கவசம் கொண்டு மூடாமல் செல்கிறீர்கள். இது யாரையாவது கடித்து விட்டால் என்ன செய்வது?' என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாயின் உரிமையாளர் முதியவரை தகாத வார்த்தைளில் பேசியதோடு, ‘நான் சொன்னால் இந்த நாய் உன்னை இப்பொழுது கடிக்கும் பார்க்கிறாயா?' என ஆவேசமாக பேசியதோடு, 'ராட்வீலர்' வகை நாயை கடிக்கும்படி ஏவி விட்டுள்ளார்.
நாய் முதியவர் மாரியப்பன் மீது பாய்ந்து கடித்து குதறியதில் அவரது மார்பு, பின் பக்க தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் இருந்த அவரது மனைவி ஓடிவந்து நாய் உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது மாரியப்பனின் மனைவியிடம் ‘நீயும் சென்றுவிடு. இல்லை என்றால் உன்னையும் நாயை விட்டு கடிக்க வைப்பேன்’ என்று மிரட்டியுள்ளார். இதற்கிடையில் மாரியப்பனை அவரது மனைவி கண் முன்னே 'ராட்வீலர்' நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் அந்த தம்பதி பயத்தில் உறைந்தனர்.
இதற்கிடையே அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், 'ராட்வீலர்' நாயுடன் வந்த நபர், நாயுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். காயம் அடைந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், முதியவர் மீது நாயை ஏவியது அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க முதியவரை 'ராட்வீலர்' நாய் பாய்ந்து கடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.