க்ரைம்

கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட புதுச்சேரி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

கடலூர்: லாரி ஓட்டுநர்களை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட புதுச்சேரி ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் அருகேயுள்ள ஆணையம்பேட்டையில், விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையோரமாக நேற்று அதிகாலை சீர்காழியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரபு (43) என்பவர், கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு உறங்கியுள்ளார். அப்போது இரு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பிரபுவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.3 ஆயிரம், டார்ச் லைட், செல்போனை பறித்துக் கொண்டு, அவரைத் தாக்கிவிட்டுச் சென்றது.

மேலும், அதே கும்பல் பெரியப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, திண்டிவனத்தில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிவந்து, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்த சீர்காழி மணிமாறன்(35) என்ற ஓட்டுநரை மிரட்டி, பணம் கேட்டுள்ளது. அவர் பணம் இல்லை என்று கூறவே, அவரைக் கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டது. இதில் காயமடைந்த ஓட்டுநர் மணிமாறன், ‌கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதேபோல, எம்புதூர் கிராமம் அருகே விவசாயி காளிமுத்து என்பவரைத் தாக்கி, அவரது செல்போனையும் அக்கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவங்கள் லாரி ஓட்டுநர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின.

இதையடுத்து, கடலூர் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இந்தக் கும்பல் கடலூர் அருகே எம்புதூர் முந்திரி காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைந்தது. நேற்று மதியம் திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, அக்கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அக்கும்பல் போலீஸாரை அரிவாளால் வெட்டியதில், போலீஸார் கணபதி, கோபு ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து ஆய்வாளர் சந்திரன் துப்பாக்கியால் சுட்டதில், அக்கும்பலைச் சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், புதுச்சேரி உழவர்கரை அந்தோணியர் கோயில் தெருவைச் சேர்ந்த ரேவந்த்குமார் (21), விழுப்புரம் மாவட்டம் பில்லூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், புதுச்சேரி உழவர்கரை சாலத் தெரு அன்பரசு (20), லால்போட்டை ஆகாஷ் (20), திருபுவனைபாளையம் ரியாஸ் அகமது (22) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விஜய் மீது கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT