சென்னை: சிறுவன் ஓட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். சென்னை பேசின் பாலத்தில் நேற்று காலை சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைக்குப்புற கவிழ்ந்தது. காரில் 5 பேர் இருந்தனர். அவர்கள் உயிர் பயத்தில் அபயக்குரல் எழுப்பினர். இதைக் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தது சவுகார்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என்பதும், கொண்டித்தோப்பை சேர்ந்த அவரது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பர்களான 16 வயது சிறுவன், 17 வயதுடைய 3 சிறுமிகளுடன் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
தந்தையிடம் போலீஸ் விசாரணை: 18 வயது நிரம்பாத நிலையில், மகனிடம் காரை கொடுத்த அவரது தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேசின் பாலம் சாலையில், காலை 9 மணிக்கு மேல் கடுமையான போக்குவரத்து நிலவும். நல்ல வேளையாக இந்த விபத்து அதற்கு முன்பாக நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தலைக்குப்புற கவிழ்ந்த காரை போக்குவரத்து போலீஸார் பின்னர் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். அதன் பிறகே அந்த வழியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.