சென்னை: துபாயில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் தடை செய்யப்பட்ட பொம்மைகள், டிரோன்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.26.4 கோடி மதிப்பிலான பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கப்பல் மூலம் கடத்தப்பட்டு, சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களில் கொண்டு வரப்படுவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
அதனடிப்படையில், சென்னை துறைமுகத்துக்கு துபாயில் இருந்து கப்பலில் வந்த கன்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர்.
அப்போது, அதில் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்ட 5 கன்டெய்னர்களை சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்தனர். அப்போது, அதில் தடை செய்யப்பட்டுள்ள பொம்மை டிரோன்கள், காலணிகள், கையடக்க மின்விசிறிகள், முடிவெட்டும் கருவி, பொம்மைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.7.5 கோடியாகும்.
இவற்றுக்கு இந்திய தரநிலைகள் பணியகம் சான்றிதழ் மற்றும் இடைநிலை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பதால் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகைப்பட பிரேம்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த ரூ.18.9 கோடி மதிப்பிலான 2 கன்டெய்னர்களை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் குறிப்பிட்ட பொருட்களுக்கு பதிலாக அழகுசாதனப் பொருட்கள், மருந்து மற்றும் பொம்மைகள் இருந்தன. இப்பொருட்களும் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.18.9 கோடியாகும்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள் சென்னையில் யாருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.