சென்னை: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). வழக்கறிஞரான இவர் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின், வழக்கறிஞர் பிரிவில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கியிருந்தார்.
சில தினங்களாக பூட்டிக் கிடந்த அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து அங்கு சென்ற விருகம்பாக்கம் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. எனவே, அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இக்கொலை தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், கொலை நடந்தாக கூறப்படும் கடந்த 27-ம் தேதி 4 பேர் கும்பல் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்தனர்.
வெங்கடேசனின் கார் ஓட்டுநராக இருந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் கார்த்திக், அவரது நண்பர் ரவி ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான வெங்கடேசனிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு வரை முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸிடம் டிரைவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், நாங்குநேரியில் குற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று திரும்பிய பின்னர் கார்த்திக்கை, வெங்கடேஷ் சென்னைக்கு அழைத்து வந்து தனது கார் ஓட்டுநராக வைத்திருந்துள்ளார். இந்த வீட்டில் மது அருந்துவது, வழக்கு சம்பந்தமாக ஆலோசனை செய்வது, பஞ்சாயத்து போன்றவற்றை செய்து வந்துள்ளனர்.
கதவை பூட்டிவிட்டு தப்பினர்: இந்நிலையில்தான் சம்பவத்தன்று மதுபோதையில் வெங்கடேசன், கார்த்திக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கார்த்திக், மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளார். சடலத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால் அங்கேயே உடலைப் போட்டுவிட்டு, கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
நிலம் விவகாரத்தில் கிடைத்த பணத்தை சரிவர பிரித்துக் கொடுக்காததால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிடிபட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினால் கொலைக்கான காரணம் தெரிந்துவிடும். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.