ஶ்ரீவில்லிபுத்தூர் ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உயிரிழந்தனர். 
க்ரைம்

ஶ்ரீவில்லி. அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதி விபத்து: தந்தையுடன் கல்லூரி மாணவி உயிரிழப்பு

அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் மல்லி மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே ஆட்டோ, பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவியும், அவரது தந்தையும் உயிரிழந்தனர். காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தைச் சேர்ந்தவர் செல்வம் (46). இவருக்கு திருமணமாகி சுமித்ரா (19), காவண்யா லட்சுமி (6) ஆகிய இரண்டு மகள்களும், சிவ ஹரிராஜா (13) என்ற மகனும் உள்ளனர். செல்வம் ஆட்டோ ஓட்டுநர். சுமித்ரா சிவகாசி மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று (மார்ச் 31) மாலை சுமித்ராவை கல்லூரியில் விடுவதற்காக செல்வம் தனது ஆட்டோவில் அழைத்து சென்றார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, சிவகாசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த தனியார் கூரியர் சரக்கு வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. பின்னால் வந்த பைக், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஒட்டி வந்த செல்வம், அவரது மகள் சுமித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மல்லி அருகே கார்த்திகைபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பூபதிராஜா (19) படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த உதயமூர்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT