பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பெலகாவி அருகே டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்பூரை அடுத்துள்ள பீடி கிராமத்தை சேர்ந்தவர் டியோக்ஜெரோன் சந்தன் நாசரேத் (82). மகாராஷ்டிர அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி ஃபிளேவியானாவுடன் (80) அங்கு வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கானாப்பூர் போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெலகாவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தனின் கழுத்திலும், கைகளிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. ஃபிளேவியானாவின் உடலில் காயங்கள் இல்லாததால் விஷம் குடித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கானாப்பூர் போலீஸார், அவரது வீட்டில் இருந்து 2 பக்க அளவிலான தற்கொலை கடிதத்தை கண்டெடுத்தனர். அதில் சந்தன், ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த அதிகாரி என்ற பெயரில் சுமித் பைரா என்பவர் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். எனது செல்போன் எண்ணை பயன்படுத்தி, சில தீவிரவாதிகள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். இதனால் என் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
அடுத்த சில தினங்களில் சிபிஐ அதிகாரி என்ற பெயரில் அனில் யாதவ் என்பவர் என்னிட்டம் பேசினார். என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டிய அவர், அதில் தப்பிக்க வேண்டுமானால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என கூறினார். முதல் கட்டமாக ரூ. 10 லட்சமும், அதனை தொடர்ந்து வீடு, நகைகளை அடகு வைத்து ரூ. 50 லட்சத்தை வங்கி மூலமாக அனுப்பி வைத்தேன்.
நண்பர்கள் சிலரிடமும் கடன் வாங்கியுள்ளேன். எனவே எனது தங்க நகைகளை விற்று, அந்த கடன்களை அடைக்க வேண்டும். எங்களது உடல்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும்'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கானாப்பூர் போலீஸார் சம்பந்தப்பட்ட சந்தனின் வங்கி கணக்கு, செல்போன் அழைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தனர். அதில் டிஜிட்டல் கைது மோசடி கும்பல் அவரை மிரட்டி பணம் பறித்ததுடன், தற்கொலைக்கும் தூண்டியது தெரியவந்தது. இதனையடுத்து சுமித் பைரா, அனில் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தனின் செல்போனில் பதிவான தொடர்பு எண்களின் அடிப்படையில் போலீஸார் குற்றவாளிகள் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர்.