மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஏ.பாறைப்பட்டியில் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 29) மாலை முன்னால் சென்ற பயணிகள் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் இன்று மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள அ.பாறைப்பட்டிக்கு நெல் நடவு செய்யும் பணிக்கு காலையில் சென்றனர். பின்னர் பணிமுடிந்து மாலை 4.30 மணியளவில் சொந்த ஊருக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் 10 பேரும் பயணித்தனர்.
ஆட்டோவில் மதுரை ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அ.பாறைப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற கார் அசுர வேகத்தில் வந்து ஆட்டோ மீது மோதியது. இதில், கூமாபட்டி நெடுங்குளத்தைச் சேர்ந்த சின்னகிருஷ்ணன் மகன் ராமர் (51), ராஜேந்திரன் மனைவி தங்கம்மாள் (47), ராஜேந்திரன், ராமர் மகன் அருஞ்சுணை (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து பேரையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏ.பாறைப்பட்டி விலக்கு பகுதியில் இதுபோல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதுவரை 7 பேர் அங்கு நடந்துள்ள விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து நிகழாமல் தடுக்க இரும்புத்தடுப்புகள் வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.