சென்னை: போதைப் பொருளாக பயன்படுத்த, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தலை தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீஸாரின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்க ஆரம்பித்துள்ளன.
இதை அறிந்த போலீஸார் அந்த கும்பலையும் கைது செய்து வருகிறது. அதன்படி, கடந்த 26-ம் தேதி மதியம் ராமாபுரம், ஆறுமுகம் நகர் முட்புதர் அருகில் கண்காணித்தபோது, அங்கு சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த ஆஷிக் என்ற ஆமோஸ் (21), போரூர் கலைச்செல்வன் என்ற மேஷக் (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, நம்ம சென்னை பேருந்து நிறுத்தம் பின்புறம் உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ்அவுஸ் டாக்டர் பெசன்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த கவுஸ்பாஷாவை (20) கைது செய்தனர். அவரிடமிருந்து 225 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட கவுஸ்பாஷா கொடுத்த தகவலின்பேரில், இவருக்கு மாத்திரைகளை விநியோகம் செய்த ராயப்பேட்டை சந்தோஷ் (18) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடமிருந்து மொத்தம் 630 மாத்திரைகள், ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.