சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக ஒரே வாரத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள் என யாராக இருந்தாலும் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும், பணம் வைத்தும் ரேஸிங் நடைபெறுகிறது.
ரேஸில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தாலும் சிலர் தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுகின்றனர். நள்ளிரவு நேரத்தில்தான் பைக் ரேஸ் அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில்தான் பைக் ரேஸ் நடைபெறுகிறது.
பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே பைக் ரேஸில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பைக் ரேஸ் இளைஞர்களின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதனால் கடும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை போலீஸார் எடுத்த நடவடிக்கையில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் எச்சரிக்கை விடுத்து விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவில் மட்டும் அண்ணா சாலை, அண்ணாநகர் பகுதிகளில் 35 பேர் வழக்கில் சிக்கினார்கள். அவர்கள் போட்டிக்கு பயன்படுத்திய பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அண்ணா சாலை தேனாம்பேட்டை பகுதியில் பைக் ரேஸ் வழக்கில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள். ஒருவர் டிப்ளமோ மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் மற்றும் வாகன ரேஸில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் மற்றும் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் எச்சரித்துள்ளனர்.