சென்னை: நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிர் தரப்பினரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும் ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
பின்னர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டவர்கள் ஆதம்பாக்கம், வானுவம்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன்(27), அதே பகுதியைச் சேர்ந்த ராபின்சன்(23) என்பது தெரியவந்தது.
கடந்தாண்டு தங்களது நண்பரின் தம்பியைக் கொலை செய்த நபர்களைப் பழி வாங்க இருவரும் கத்திகளுடன் வந்ததாகவும், பார்த்திபன் தனது வீட்டினருகே உள்ள தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டை புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டைக் கைப்பற்றினர். மேலும், 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பார்த்திபன் மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.