சென்னை: சென்னையில் கடைகள், கட்டுமானப் பணிகளுக்காக, பிஹாரில் இருந்து சென்னைக்கு ரயிலில் சிறார்களை அழைத்து வந்த 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். 9 சிறார்களை ரயில்வே போலீஸார் மீட்டு, அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பிஹார் மாநிலம் சாப்ராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்த போது, 9 சிறுவர்களை 3 பேர் அழைத்து சென்றனர். அவர்கள் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரனாக பேசினார். தொடர்ந்து, காவல் நிலையத்து அழைத்து விசாரித்தபோது, இந்த சிறுவர்களை பிஹாரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து, இங்குள்ள கடைகள், கட்டுமானமானப் பணிகளில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது.
மேலும், சென்னையில் கட்டிடத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, பிஹார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அழைத்து வருகின்றனர். இதற்காக அவர்களின் பெற்றோரிடம் சிறிய தொகை கொடுக்கின்றனர். ஆனால், முதலாளிகளிடம் பெரிய தொகை பெற்றுவிடுகின்றனர். அதன் பின் சிறார்களை கொத்தடிமைகளாக ப பயன்படுத்துவதும் விசாரணையில்
தெரியவந்தது. இது தொடர்பாக, பிஹாரைச் சேர்ந்த சுரேந்தர் ராவத் (50),அஜய்குமார்(28) உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சைலேஷ் ராஜ்பார் (21) ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 9 சிறார்களை சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.