சென்னை: பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி இரவு 10.30 மணியளவில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘நீங்கள் இருக்கிற இடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
அது 5 நிமிடத்தில் வெடித்து சிதறும்’ எனக்கூறி இணைப்பை துண்டித்தார். இதையடுத்து, போலீஸார் வெடி குண்டு நிபுணர்களுடன் சென்று காவல் கட்டுப்பாட்டு அறையில் சோதனை மேற்கொண்டனர். வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே, மிரட்டல் வதந்தி என்பது உறுதியானது. மிரட்டல் வந்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரித்த போலீஸார், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த லிங்கபூபதி (20) என்பவரை கைது செய்தனர்.
அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். கைது செய்யப்பட்ட லிங்கபூபதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளதும், அங்கு சம்பளம் சரிவர வழங்கப்படாததால் வேலையிலிருந்து நின்றுள்ளதும், இதனால், பெட்ரோல் பங்க் மேலாளர் பழனிசாமி லிங்கபூபதியை தொடர்பு கொண்டு வேலைக்கு வருமாறு மிரட்டி உள்ளார்.
மேலும், வேலைக்கு வரவில்லை என்றால் வெடிகுண்டு வீசி விடுவேன் என்று மிரட்டி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த லிங்கபூபதி மேலாளர் பழனிசாமிக்கு போனில் மிரட்டல் விடுப்பதாக நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.