திருநெல்வேலி: “தந்தைக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் வரலாம்” என்று கூறி, நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் ஒரு வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான இவர், டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தார். இவர் கடந்த 18-ம் தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து திருநெல்வேலி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப் பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில் அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். டவுனில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவரையும் போலீஸார் கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி என்பவரும் தனது தந்தையைப் போல் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், “அடுத்த இலக்கு நான்தான் என்பதுபோல் இப்போது நிலை உள்ளது. எனது தந்தைக்கு ஏற்பட்ட நிலை போல் எனக்கும் ஏற்பட்டால் எதிர்காலத்தில் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வெளியிட்டுள்ளேள்.
நான் வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், எங்கள் வீட்டை வீடியோ பதிவு செய்தார். இதைப் பார்த்து நான் வெளியே சென்றபோது அவர் உடனடியாக வாகனத்தில் சென்றுவிட்டார். சாவுக்கு பயந்து நாங்கள் இல்லை. அதற்கு பின்னர் உள்ள பொறுப்பை நினைத்துதான் கவலைப்படுகிறோம். வழக்கு பதிவு செய்து, 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியின் மனைவியை பிடிக்க முடியவில்லை. அவரை எப்போது பிடிக்க போகிறீர்கள்?
குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்க வேண்டாம். அது அரசுக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தும். நான் பதற்றப்படவில்லை. பிரச்சினையை எளிதாக கையாளுகிறேன். அதிகாரிகளுக்கு அரசு உதவியாக இருப்பதால்தான் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி. முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை விட்டுவிட மாட்டேன். நடவடிக்கை எடுத்தால் நான் எனது வேலையை பார்த்துக்கொண்டு இருப்பேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று கூறியுள்ளார்.