க்ரைம்

கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கோட்டூர்புரத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், நாவலூர் குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் (24), மற்றும் கோட்டூர்புரம், சித்ரா நகரில் வசித்து வந்த அருண் (25) ஆகிய இருவரும் கடந்த 16-ம் தேதி கோட்டூர்புரம், சித்ரா நகர் வீட்டுவசதி வாரியம், நாகவள்ளி அம்மன் கோயில் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.முதல் கட்டமாக கொலை தொடர்பாக செங்கல் பட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்குகாபி சுரேஷ் (26), கோட்டூர்புரம் கரண் என்ற மனோஜ் (21), படபழனி ராசுக்குட்டி என்ற செல்வகணபதி (19), ஜீவன் (19) ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சுக்கு காபி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கொலை திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

தொடர்ந்து இக்கொலை தொடர்பாக சுக்குகாபி சுரேஷின் கூட்டாளிகள் விக்னேஷ் என்ற விக்கி (20), தருண்குமார் (19), ஷாம் ஜெபாஸ்டின் (19), ஆகிய 3 பேர் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கொட்டிவாக்கம் ஆனந்த் என்ற சீட்டா (20), அதே பகுதி கார்த்திக் (22)ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT