சமூக வலை தளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிட்ட திருச்செந்தூர் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் யானை சாலை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மணிகண்டன், தனது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், 234 எம்எல்ஏக்கள் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தனது தொகுதியின் வளர்ச்சிக்கும் இவர்கள் எதுவும் செய்யாததால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோவில் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வெளிவந்த மறுநாள் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் தனது நண்பர்கள், நல விரும்பிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்திருந்தார். மேலும், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவல் விவரம்: திருச்செந்தூர் யானை சாலை தெருவை சேர்ந்த சங்கரன் நயினார் மகன் மணிகண்டன் (35) என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் 20.03.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்டாம்புளி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கெனவே இதுபோல் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏரல், சென்னை அண்ணா நகர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் ஆகியவற்றில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.
இதுபோல் சமூக வலைதள பக்கங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.