திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் டவுன் காவல் முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). திருநெல்வேலியில் 18-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் திருநெல்வேலி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி புதன்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து திருநெல்வேலி டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையருமான செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மார்ச்) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள முகமது தவுபிக்கின் மனைவி நூருன்னிஷாவை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் திருவனந்தபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து தனிப்படை போலீஸார் திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளதாக தெரிகிறது.