திருப்பூர்: பல்லடம் அருகே தாய், தந்தை, மகனை கடந்த நவ. 28-ம் தேதி மர்ம கும்பல் வெட்டிக்கொன்ற வழக்கு 110 நாட்களை எட்டிய நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் அடையாத நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி இன்று (மார்ச் 18) உத்தரவிட்டார்.
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை கடந்த நவ. 28-ம் தேதி மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற வழக்கு, தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
அவிநாசிபாளையம் போலீஸார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரித்தனர். தோட்டத்து வீடு என்பதால், அங்கு பணியாற்றியவர்கள் உட்பட பலரிடமும் விசாரிக்கப்பட்டது. தோட்டத்து வீடுகளில் வாழும் விவசாயிகள் உயிரையும், உடைமையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போலீஸார் விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி உரிமம் வழங்குவது குறித்து, உடனடியாக பரிசீலிக்க வேண்டும். சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நிகழ்ந்த 3 பேர் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து, உரிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் விவசாயிகள் மற்றும் குற்றவாளிகளை கண்டறிய பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
தோட்டத்து வீட்டை சுற்றி 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள், கைரேகைகள், கொலை செய்த மர்ம கும்பல் எடுத்துச்சென்ற செந்தில்குமாரின் விலை உயர்ந்த அலைபேசி உள்ளிட்டவைகளை கண்டறியும் பணியும் நடந்தது.
அதேபோல் கடந்த டிச.14-ம் தேதி சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர், போலீஸார் தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அடித்து துன்புறுத்துவதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். அதேபோல் குறவர் சமூக மக்களை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்துவதாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கில் சந்தேகப்படும் நபர்களுக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டு விசாரிப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கில் தற்போது 110 நாட்களை எட்டிய நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் தமிழக டிஜிபி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இன்று உத்தரவிட்டார். இனியாவது வழக்கு விசாரணை துரிதமாக நடந்து, உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.