க்ரைம்

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்தவர்!

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் நெல்லையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (57) காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் தர்காவுக்கு தொழுகைக்கு சென்றுள்ளார்.

தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஜாகிர் உசேன் பிஜிலியை வழிமறித்து அறிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டது. திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

ஜாகிர் உசேன் பிஜிலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினையில் இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT