சென்னை: காய்கறி வியாபாரியிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர், ஏழுமலை தெருவில் வசித்து வருபவர் அருண் (30). தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை குமரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் மது அருந்த பணம் கேட்டு அருணிடம் தகராறு செய்தனர். பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியைக் காட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக திருவிக நகர் காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்து தப்பியது செம்பியத்தைச் சேர்ந்த கோபி என்ற கமலக்கண்ணன் (35), அவரது கூட்டாளி கார்த்திகேயன் (23) என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கோபி திருவிக நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கெனவே 2 கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி உட்பட 18 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.