கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான 2 சிறுமிகள், 4 நாட்களுக்குப் பிறகு நெல்லையில் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தாயாருடன் வசித்து 2 சகோதரிகள் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 12-ம் தேதி இருவரும் மாயமானார்கள். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவிகளை போலீஸார் தேடி வந்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த 13-ம் தேதி அதிகாலை சுங்கான்கடை பகுதியில் இளைஞர் ஒருவருடன் 2 சிறுமிகளும் மோட்டார் சைக்கிளில் செல்வதும், அங்குள்ள கடையில் டீ குடித்ததும் தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் மாணவிகளை ஏற்றிச் சென்றவர் தக்கலையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார்(29) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். பின்னர், திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 சிறுமிகளையும் போலீஸார் மீட்டனர். இருவரையும் தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
ஊர் சுற்றிப் பார்க்க நினைத்த சிறுமிகள் இருவரும், கடந்த 12-ம் தேதி இரவு வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ஆடைகளை எடுத்துக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். பின்னர், எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர். இதை சாதகமாகப் பயன்படுத்திய அஜித்குமார், தனது அலுவலகத்துக்கு மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டுள்ளார். சிறுமிகள் இருவரும் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறங்கி தவித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை போலீஸார் மீட்டனர்.
மருத்துவ பரிசோதனைக்காக சிறுமிகள் இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், போக்சோ வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் உள்ளன.
இதற்கிடையே அஜித்குமார், காவல் நிலையத்தில் கழிவறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை முறிந்து விட்டதாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அஜித்குமாரை போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அஜித்குமாருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரால் திருமணம் நின்று போனதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அஜித்குமாரின் தந்தை ராஜன், சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார்.