கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி ராஜேந்திரன் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வகை மதுபாட்டில்களும் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த கள்ளத்தனமான மது விற்பனையில் புதுச்சேரி பாக்கெட் சாராயம், உயர் ரக மதுபாட்டில்கள், டாஸ்மாக் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் அதிகாலை முதலே விற்பனை செய்யப்படுகிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி ராஜேந்திரன் கூறும்போது, “காவல் துறையினரின் கண்காணிப்பையும் மீறி இப்பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். கள்ளச் சாராயம் அருந்தும் நபர்களால் பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலரும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றோம். எனவே ஆட்சியர் இதில் தலையிட்டு கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்” என மனு அளித்துள்ளேன் என்றார்.