பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடியான அவரது பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சரஸ்வதி (85). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் வீட்டின் வெளியே உள்ள தனி அறையில் வசித்து வந்தார். அவ்வப்போது வீட்டிலிருந்து வெளியே சென்று விடும் சரஸ்வதியை உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள்.
இந்நிலையில், இன்று காலை மது போதையில் இருந்த சரஸ்வதியின் பேரனான ரவுடி பத்மநாபன் (23), வீட்டிலிருந்த சுத்தியலால் சரஸ்வதியின் தலையில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பத்மநாபனை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், கைதான பத்மநாபன் போதை பொருள் தடுப்பு வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 18-ம் தேதி கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 5-ம் தேதி பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.