சிவகாசி: சிவகாசியில் பழிக்குப்பழியாக நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கூலித் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலாவூரணியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ்(27). கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியுடன் சிவகாசி - விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ் முனீஸ் நகரில் உள்ள வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மாரனேரி போலீஸார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகாசியில் வீட்டிற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட சுரேஷ் மீது கடந்த ஆண்டு திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த குணசேகரன் என்பவர் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது தம்பி மதனகோபால் சுரேஷை வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் முழு விபரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.