க்ரைம்

சென்னை | ஸ்டூடியோவில் ரூ.20 கோடி கையாடல் செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் போட்டோ ஸ்டூடியோவில் ரூ.20 கோடி கையாடல் செய்த ஊழியர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, கோவை உள்ளிட்ட 52 இடங்களில் பிரபல தனியார் போட்டோ ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது.

இதில், சென்னை மற்றும் கோவை கிளைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் கோபாலகிருஷ்ணன், கவுதம் மற்றும் நிறுவனத்தின் தலைமை அலுவலக கணக்காளரான கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து சுமார் ரூ.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, ஸ்டூடியோ மேலாளர் ஜெயவேல் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் இணைந்து பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 524 கிராம் தங்க நகைகள், 600 கிராம் வெள்ளிப் பொருட்கள், சொகுசு கார் மற்றும் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT