மதுரை: மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் மேலூர் தொகுதி சார்பில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அமைச்சர் பி. மூர்த்தி போட்டியை காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார். 1000-க்கும் மேற்பட்ட காளைகளும், 650 வீரர்களும் பங்கேற்றன.
வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கினர். 3-வது சுற்றில் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள கச்சராயிருப்பைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் மகேஷ்பாண்டி(25) சக வீரர்களுடன் களமிறங்கினார்.
சிறிது நேரத்தில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்றை திமிலை பிடித்து அடக்க மகேஷ்பாண்டி முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சு பகுதியில் காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்தார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல் சிகிச்சைக்கென மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரிந்தது.
உயிரிழந்த மகேஷ் பாண்டி பட்டப்படிப்பு படித்துவிட்டு, 3 ஆண்டாக வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் தான் அவர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரராக களமிறங்கிய போது, காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அலங்காநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.