விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ராஜாம்புளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50) இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பச்சையம்மாள் (46), மகள் கோபிகா (18), மகன் குணகேகர் (21).
இந்நிலையில், துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்ததால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க துரைக்கண்ணு, குணசேகர் ஆகியோர் பைக்கில் இன்று அதிகாலை 2 மணிக்கு செஞ்சிக்கு புறப்பட்டனர். ஒரு பைக்கில் துரைக்கண்ணு அவரது மனைவி பச்சையம்மாளும், மகள் கோபிகாவும், குணசேகர் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் செஞ்சி திண்டிவனம் சாலையில் வல்லம் தொண்டியாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இத் தகவல் அறிந்த செஞ்சி போலீஸார் விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த துரைக்கண்ணுவின் மகள் கோபிகா வயது (18) பிஎஸ்சி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். விபத்து குறித்து குணசேகர் செஞ்சி போலீஸில் கொடுத்த புகாரில் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.