க்ரைம்

சென்னை: செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் பணம், நகை பறித்த பெண் கைது

செய்திப்பிரிவு

செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் நூதன முறையில் பணம், நகை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி பாஷ்யம் 2-வது தெருவை சேர்ந்தவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதியில் அக்பர் சென்று கொண்டிருந்தபோது, வழியில் குறி சொல்லும் பெண் ஒருவரை பார்த்துள்ளார். அவரிடம் தனது எதிர்காலம் குறித்து அக்பர் கேட்டபோது, அந்த பெண், உனது மனைவி உனக்கு செய்வினை வைத்துள்ளார், அதனை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் பேரில், ரூ.40,000 பணம் மற்றும் 1.5 பவுன் நகையை அந்த பெண்ணிடம் அக்பர் கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பணம் மற்றும் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு மந்திரம் செய்து, நான் சொல்லும் போது தான் டப்பாவை திறந்து பார்க்க வேண்டும் என கூறி, டப்பாவை அக்பரிடம் அவர் கொடுத்துள்ளார். பின்னர், ஓரிரு நாள் கழித்து, சந்தேகத்தின் பேரில் அக்பர் அந்த டப்பாவை திறந்து பார்த்தார். அப்போது அதில் பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து திருமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, செங்குன்றம் நேதாஜி நகரை சேர்ந்த விஜய லட்சுமி (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.25,000 பணம், 1.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT