க்ரைம்

சென்னை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடிக்க முயன்றவர் கைது

செய்திப்பிரிவு

வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மணி (65). ஓய்வு பெற்ற செவிலியர் பேராசிரியை. இவர், தனது மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மருந்துகள் டெலிவரி செய்ய வந்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். தனது மகள் ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்திருப்பார் என நினைத்து, அந்த நபரை வீட்டினுள் அழைத்துள்ளார்.

அப்போது திடீரென அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணியின் இடது கையில் குத்திவிட்டு, வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து தருமாறு மிரட்டியுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த மூதாட்டியை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, ராமாபுரம் பாரதி சாலையை சேர்ந்த நாகமுத்து (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT