க்ரைம்

கோவை அருகே லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ கைது

செய்திப்பிரிவு

லஞ்ச வழக்கில் போலீஸாரிடம் சிக்காமல் தப்புவதற்காக, குளத்தில் குதித்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கோவை தொம்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக மத்தவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சான்று வழங்க ரூ.3,500 லஞ்சமாக தருமாறு விஏஓ வெற்றிவேல் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத கிருஷ்ணசாமி, இது தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பின்னர் போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.3,500 பணத்தாள்களை பேரூரில் நேற்று முன்தினம் இரவு வெற்றிவேலிடம் கொடுத்தார் கிருஷ்ணசாமி. அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார், வெற்றிவேலைக் கைது செய்த முயன்றனர். உஷாரான வெற்றிவேல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தார். பேரூர் பெரியகுளம் அருகே சென்றபோது திடீரென விஏஓ வெற்றிவேல் பணத்துடன் குளத்தில் குதித்தார். பின்னால் துரத்தி வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் குளத்தில் குதித்து வெற்றிவேலைப் பிடித்தனர். தண்ணீரில் விழுந்த ரசாயனம் தடவிய பணத்தாள்களை தேடி எடுத்தனர். தொடர்ந்து, வெற்றிவேலைக் கைது செய்த போலீஸார், அவரிடம் பேரூர் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT