படம்: மெட்டா ஏஐ 
க்ரைம்

ரஷ்யா பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி: இந்தோ - ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​தில் புகார் ஒன்று அளித்​திருந்தார். அதில், “சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் இந்தோ - ரஷ்யன் அசோசி​யேட் என்ற பெயரில் நிறு​வனத்தை நடத்தி வருபவர் அருண்​ராஜ் (38). இவர் ஈஞ்சம்​பாக்​கத்​தில் உள்ள ஆலிவ் பீச்​சில் வசிக்​கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்​டமைப்​பின் பிரதி​நிதி என்று கூறி என்னிடம் அறிமுக​மானார்.

மேலும், ரஷ்ய அரசு இந்திய திட்​டங்​களுக்காக கோடிக்​கணக்​கில் பணம் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. திருச்​சி​யில் நான் நடத்தி வரும் வியாபார திட்​டத்​துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத் தருவ​தாக​வும் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு அவர் கமிஷனாக என்னிட​மிருந்து ரூ.7 கோடியே 32 லட்சத்து 45,000 பெற்றுக் கொண்​டார்.

மேலும், எனது நிறு​வனத்​தில் ரஷ்ய நிறு​வனம் முதலீடு செய்​துள்ளதாக போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்​பித்​தார். அவை போலி என்பது பின்னர்​தான் தெரிய ஆரம்​பித்​தது. அருண்​ராஜை​யும், அவரது கூட்​டாளி​களை​யும் தொடர்பு கொண்​ட​போது தொடர்பு கொள்ள முடிய​வில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என புகாரில் தெரி​வித்து இருந்​தார்.

9 பேர் கைது: இதுகுறித்து சென்னை மத்திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்​பட்டதாக அருண்​ராஜ் மற்றும் அவரது கூட்டாளி ரூபாள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அவர்​களிட​மிருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், ரூ.14.50 லட்சம் ரொக்​கம், 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்​யப்​பட்டது.

இந்த வழக்கில் தற்போது இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் தங்கப்பன் (68) கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று இக்கும்பல் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் சின்னசாமி என்பவரிடமும் இதே பாணியில் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து ரூ.4.4 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கிலும் தற்போது அருண்ராஜ் மற்றும் ரூபா கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT