விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2024 நவம்பரில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்ததில் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
அந்நிலையில், வெள்ளத்தால் குடியிருப்புகளையும், உடைமைகளையும் இழந்துள்ள நிலையில், மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. அலுவலர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. நிவாரண உதவிகளைக் கூடசெய்யவில்லை எனக் கூறி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ. மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் பொன்முடி, அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்றபோது, இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், காரிலிருந்து இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த இருவர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது சேறு தெறித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர்கள் தீபக் ஸ்வாட்ச், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தலைமறைவான இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 21-ம் தேதி ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயராணியை போலீஸார் இன்று (மார்ச் 12) கைது செய்தனர்.